பாசமான குடும்பத்தின் பொறுப்பான மகன் ரோஹித். கல்லூரி முடித்து விட்டு கம்ப்யூட்டர் பயிற்சி பெறுகிறார். தீவிரவாதிகள் நாட்டுக்குள் புகுந்தால் போலீசுக்கு தெரியப்படுத்தும் சாப்ட்வேரை கண்டுபிடிக்கிறார். ஆனால் அவரையே தீவிரவாதியாக்குகிறது போலீஸ். பக்கத்துவீட்டில் ஒரு பெண் பாலியல் தொழில் செய்வதால் வீட்டை காலி செய்து விட்டு வேறொரு வீட்டுக்கு
குடிபெயர்கிறது ரோஹித்தின் குடும்பம். இவர்கள் குடியேறும் வீட்டில் ஏற்கெனவே தீவிரவாதிகள் குடியிருந்திருக்கிறார்கள். தீவிரவாதிகளை வேட்டையாடும் போலீஸ் அதிகாரி தேனப்பன் தலைமையிலான டீம், தவறுதலாக ரோஹித்தை தீவிரவாதி என நினைத்து சுட்டுவிடுகிறது.
ரோஹித் பிழைத்துக் கொள்ள, போலீஸ் தங்கள் தவறை மறைக்க, அவரை தீவிரவாதியாக சித்தரித்து சிறையில் தள்ளுகிறது. போலீசின் கொடுமைகள் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் ரோஹித் பொங்கி எழுகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பது கதை. அமைதியான குடும்பத்துக்குள் போலீஸ் புகுந்தால் ஏற்படும் விளைவுகளை வலியோடு பதிவு செய்திருக்கிறது படம். புதுமுகம் என்றாலும் நிறைவாக நடித்திருக்கிறார் ரோஹித். குடும்ப கலாட்டாக்களில் காட்டும் சந்தோஷம், போலீஸ் சித்ரவதையில் அனுபவிக்கும் துன்பம், பிறகு எடுக்கும் ஆக்ரோஷ அவதாரம் என வெரைட்டி நடிப்பை காட்டியிருக்கிறார். இன்னொரு ஹீரோவான பூஷன், உள்ளூர் தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கிறார்.
காதலி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப் படும்போது, அதை தடுக்கமுடியாமல் தவிக்கும் காட்சியில் நன்றாக நடித்திருக்கிறார். இதே காட்சியில் மேகா நாயரின் நடிப்பும் பாராட்டும்படி இருக்கிறது. ரோஹித்தின் காதலியாக வரும் தேவிகாவின் நடிப்பு பரவாயில்லை. தயாரிப்பாளர் தேனப்பனுக்கு தோற்றத்துக்கு ஏற்ற கேரக்டர். நடிப்பு கச்சிதம். இனி இவரும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக வலம் வரலாம். மீரா கிருஷ்ணனும், ராஜாவும் வழக்கமான சென்டிமென்ட் அப்பா, அம்மா.
பிற்பகுதியில் வரும் கனமான காட்சிகளுக்கு ஏற்ற வகையில் முற்பகுதியில் கதையில் வலுவேற்ற தவறியிருக்கிறார் இயக்குனர். ஜாலியான குடும்பம் என்பதை வெறும் வசனங்களாலேயே சொல்லியிருப்பதால் எந்த காட்சியும் சுவாரஸ்யமாக அமையவில்லை. ரோஹித் போலீசாரால் சுடப்பட்ட பிறகே கதை நகர ஆரம்பிக்கிறது. முற்பகுதியில் வீட்டு புரோக்கர் கலகலப்பூட்டுகிறார். இடைவேளைக்கு பிறகு திரைக்கதையில் இருக்கும் விறுவிறுப்பு முன்பகுதியிலும் இருந்திருந்தால் பரபரப்பாக இருந்திருக்கும்.
Key word:நெல்லை சந்திப்பு-விமர்சனம்.
No comments:
Post a Comment