Wednesday, 19 September 2012

துள்ளி எழுந்தது காதல் -விமர்சனம்.


ராஜாவுக்கு உடன் படிக்கும் ஹரிப்பிரியா மீது கண்டதும் காதல். ஹரிப்பிரியாவுக்கும் ராஜா மீது காதல். இருவரும் காதலை சொல்லாமல் பழகுகிறார்கள். ஒரு முறை நண்பர்கள் இணைந்து பெங்களூருக்கு டூர் செல்லும்போது ராஜாவும், ஹரிப்பிரியாவும் ஓர் இரவை தனியாக கழிக்க வேண்டிய
சூழ்நிலை. இது நண்பர்களிடையே சந்தேகத்தை கிளப்புகிறது.  இந் நிலையில் ஹரிப்பிரியாவை அமெரிக்க மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க, ஏற்பாடு நடக்கிறது. அமெரிக்க மாப்பிள்ளை ஹரிப்பிரியாவை பற்றி விசாரிக்க, அந்த பெங்களூர் சம்பவத்தால் திருமண ஏற்பாடுகள் நிற்கிறது. ராஜாவை மனசுக்குள் காதலித்துக் கொண்டிருந்த ஹரிப்பிரியா அவரை வெறுக்கிறார்.

பெங்களூரில் அந்த இரவில் நடந்தது என்ன? ராஜா, ஹரிப்பிரியா இணைந்தார்களா என்பது கதை. ஒரு மனிதனின் சிறு தவறை பெரிதாக்கி, அவனது நல்ல குணங்களை மறந்துவிடுவது பல பிரச்னைகளுக்கு காரணமாக அமையும் என்ற மெசேஜ் சொல்கிறது படம். கிளைமாக்சில் ஆசிரியை பூமிகா, வெள்ளைத் தாளில் கருப்பு புள்ளி வரைந்து, ‘மாணவர்களிடம் இது என்ன? என்று கேட்க, ஒருவர் புள்ளி என்பார். ஒருவர் பொட்டு, என்பார். ஒருவர் வட்டம் என்பார். அப்போது, பூமிகா, “எல்லோரும் அந்த கறுப்பு புள்ளியைத்தான் பார்த்தீர்கள். அதைச் சுற்றியுள்ள வெள்ளை பரப்பை பார்க்கவில்லை. குறைகள் மட்டுமே பளிச்சென்று தெரியும், நிறைகள் தெரியாது’’ என்பார். படம் சொல்ல வருவது இதைத்தான்.

புதுமுகம் ராஜாவுக்கும் ஹரிப்பிரியாவுக்கும் நல்ல நடிப்பு தீனி. காதல் பொங்கி வரும்போது அதை மறைத்து நட்பு முகமூடி போட்டுக் கொள்ளும்போது போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். பின்னர் ஹரிப்பிரியா ராஜாவை வெறுப்பதும், ராஜா, ஹரிபிரியா மீது தன்னால் ஏற்பட்ட களங்கத்தை துடைக்க எடுக்கும் முயற்சிகளும் வழக்கமான சினிமாதான் என்றாலும் சுவாரஸ்யம். போபோ சசியின் பின்னணி இசை காதலையும், பிரிவையும் உணர வைக்கிறது. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு பளிச்.

காதலின் மகத்துவத்தையும் சின்ன உரசல்களால் அது சிதைந்து விடுவதையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். கதை நடப்பது பள்ளியா? கல்லூரியா என்பதில் குழப்பம். எல்லோரும் சீருடை அணிந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் பண்ணுகிற காரியமெல்லாம் கல்லூரி ரேஞ்சுக்கு இருக்கிறது. பள்ளி சீருடையில் காதலிப்பது, ரகசிய டூர் போவது, தண்ணியடிப்பது போன்ற காட்சிகள் மனதை பதற வைக்கிறது. உயர்ரக செல்போன் பயன்படுத்தும் ஹீரோவும், ஹீரோயினும் தாங்கள் வந்த ஓட்டல் எதுவென்று தடுமாறி விடிய விடிய தேடுவதெல்லாம் டூ மச். குறைகளை களைந்திருந்தால் காதல் துள்ளியிருக்கும்.
Tag:துள்ளி எழுந்தது காதல் -விமர்சனம்.

No comments:

Post a Comment