நடிகர் : விக்ரம் பிரபு
நடிகை : லட்சுமி மேனன்
இயக்குனர் : பிரபு சாலமன்
இசை : டி.இமான்
ஓளிப்பதிவு : சுகுமார்
கும்கி யானையை வைத்து பிழைக்கும் ஏழை இளைஞனை சுற்றி பின்னப்பட்ட ஜீவனுள்ள கதை...

மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களை கொம்பன் என்ற காட்டு யானை கொன்று அழிக்கிறது. அவர்கள் பயிர்களையும் நாசம் செய்கிறது. வனத்துறையினர் வீடுகளை காலி செய்யும்படி நிர்ப்பந்திக்கின்றனர். முன்னோர் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேற அவர்கள் மறுக்கின்றனர்.
காட்டு யானையை விரட்ட பழக்கப்பட்ட கும்கி யானையை கிராம மக்களே பணம் கொடுத்து வரவழைக்கின்றனர். பேசியபடி கும்கி யானையை வைத்திருப்பவனால் வர முடியவில்லை. அவன் வருவதுவரை பழங்குடி மக்களை ஏமாற்ற பொம்மன் யானையுடன் செல்கிறான்.
பழங்குடியினர் தங்களை காக்க வந்த தெய்வம் என்று பொம்மனையும், போலி ‘கும்கி’ யானையையும் கொண்டாடுகிறார்கள். பழங்குடியின தலைவனின் மகள் அல்லியின் அழகு பொம்மனை கிறங்க வைக்கிறது. அவளை பார்த்தவுடனேயே காதலில் வீழ்கிறான்.
ஒரிஜினல் ‘கும்கி’ யானையை வரவிடாமல் தடுத்து அல்லிக்காக அங்கேயே தங்குகிறான் பொம்மன். அல்லியும் அவனது காதலை ஏற்கிறாள். அவளுக்கு பெற்றோர் தங்கள் இனத்திலேயே மாப்பிள்ளை பார்க்கின்றனர். அப்போது காட்டு யானை கொம்பன் கிராமத்துக்குள் இறங்குகிறது.
அதன்பிறகு நடப்பவை உயிரை உருக்கும் கிளைமாக்ஸ்...
வித்தியாசமான கதை களத்தில் காட்சிகளை உயரோட்டமாக நகர்த்துகிறார் இயக்குனர் பிரபு சாலமன். பொம்மன் கேரக்டரில் விக்ரம் பிரபு வாழ்ந்திருக்கிறார். இவர் நடிகர் பிரபுவின் மகன். முதல் படத்திலேயே கனத்த கதைக்குள் கச்சிதமாய் பொருந்தி செஞ்சுரி அடிக்கிறார்.
தாய் மாமன் தூண்டுதலால் திருடிய யானையிடம் கோபிப்பது, வனத் துறையிடம் மன்றாடி யானையை மீட்பது என அழுத்தமான பதிவுகளாக மனதை நீங்காமல் இருக்கிறார். அல்லியுடன் காதல் வயப்படுவது கவித்துவம்...
பழங்குடியினர் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையில் நெகிழ்ந்து காதலை உதறிவிட முடிவெடுத்து தனது மாமனிடம் பேசும் வசனங்களில் விழிகளில் நீர்முட்ட வைக்கிறார். கிளைமாக்சில் முதிர்ச்சியான நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.
அல்லியாக வரும் லட்சுமி மேனன் வனதேவதையாய் பளிச்சிடுகிறார். காட்டு யானையின் வெறியாட்டத்தில் தப்புவது திகில்... இன பழக்கத்தை மீற முடியாமலும், காதலை உதற முடியாமலும் தவித்து மனதில் கிறங்குகிறார்.
விக்ரம்பிரபுவின் தாய் மாமனாக வரும் தம்பி ராமையா கலகலப்பூட்டுகிறார். போலி கும்கி யானையை பழங்குடியினர் கண்டுபிடித்து விடுவார்களோ என உயிர் பயத்தில் இவர் நடுங்கும் சீன்கள் ரகளை. படம் முழுக்க ஒரே மாதிரியே பேசி திரிவது சலிப்பு.
விக்ரம் பிரபுவின் உதவியாளராக உண்டியல் கேரக்டரில் வரும் அஸ்வின் சிரிக்க வைக்கிறார். பழங்குடியின தலைவராக வரும் ஜோய்மல்லூரி நேர்த்தி. காட்சிகளில் திருப்பங்கள், சஸ்பென்ஸ் வைத்து இருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும்.
இதையும் மீறி பழங்குடியினரின் வாழ்வியலும் மலையோர அழகியலும், காதலும் மனதை கட்டிப்போடுகிறது. இமான் இசையில் பாடல்கள் வருடுகின்றன. சுகுமாரின் கேமரா காட்டின் பசுமையை கண்களில் பதிக்கிறது.
No comments:
Post a Comment