Monday, 31 December 2012

கும்கி- கதை


நடிகர் : விக்ரம் பிரபு
நடிகை : லட்சுமி மேனன்
இயக்குனர் : பிரபு சாலமன்
இசை : டி.இமான்
ஓளிப்பதிவு : சுகுமார்
கும்கி யானையை வைத்து பிழைக்கும் ஏழை இளைஞனை சுற்றி பின்னப்பட்ட ஜீவனுள்ள கதை...  

கேரள எல்லையில் வசிப்பவன் பொம்மன். சிறு வயதில் இருந்தே தன்னுடன் வளர்ந்த மாணிக்கம் என்ற யானையே அவன் உலகம். திருமணங்கள், கோவில்களுக்கு யானையை கொண்டு போய் சம்பாதித்து தனது வாழ்வை நகர்த்துகிறான்.

மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களை கொம்பன் என்ற காட்டு யானை கொன்று அழிக்கிறது. அவர்கள் பயிர்களையும் நாசம் செய்கிறது. வனத்துறையினர் வீடுகளை காலி செய்யும்படி நிர்ப்பந்திக்கின்றனர். முன்னோர் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேற அவர்கள் மறுக்கின்றனர்.

காட்டு யானையை விரட்ட பழக்கப்பட்ட கும்கி யானையை கிராம மக்களே பணம் கொடுத்து வரவழைக்கின்றனர். பேசியபடி கும்கி யானையை வைத்திருப்பவனால் வர முடியவில்லை. அவன் வருவதுவரை பழங்குடி மக்களை ஏமாற்ற பொம்மன் யானையுடன் செல்கிறான்.

பழங்குடியினர் தங்களை காக்க வந்த தெய்வம் என்று பொம்மனையும், போலி ‘கும்கி’ யானையையும் கொண்டாடுகிறார்கள். பழங்குடியின தலைவனின் மகள் அல்லியின் அழகு பொம்மனை கிறங்க வைக்கிறது. அவளை பார்த்தவுடனேயே காதலில் வீழ்கிறான்.

ஒரிஜினல் ‘கும்கி’ யானையை வரவிடாமல் தடுத்து அல்லிக்காக அங்கேயே தங்குகிறான் பொம்மன். அல்லியும் அவனது காதலை ஏற்கிறாள். அவளுக்கு பெற்றோர் தங்கள் இனத்திலேயே மாப்பிள்ளை பார்க்கின்றனர். அப்போது காட்டு யானை கொம்பன் கிராமத்துக்குள் இறங்குகிறது.

அதன்பிறகு நடப்பவை உயிரை உருக்கும் கிளைமாக்ஸ்...

வித்தியாசமான கதை களத்தில் காட்சிகளை உயரோட்டமாக நகர்த்துகிறார் இயக்குனர் பிரபு சாலமன். பொம்மன் கேரக்டரில் விக்ரம் பிரபு வாழ்ந்திருக்கிறார். இவர் நடிகர் பிரபுவின் மகன். முதல் படத்திலேயே கனத்த கதைக்குள் கச்சிதமாய் பொருந்தி செஞ்சுரி அடிக்கிறார்.

தாய் மாமன் தூண்டுதலால் திருடிய யானையிடம் கோபிப்பது, வனத் துறையிடம் மன்றாடி யானையை மீட்பது என அழுத்தமான பதிவுகளாக மனதை நீங்காமல் இருக்கிறார். அல்லியுடன் காதல் வயப்படுவது கவித்துவம்...

பழங்குடியினர் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையில் நெகிழ்ந்து காதலை உதறிவிட முடிவெடுத்து தனது மாமனிடம் பேசும் வசனங்களில் விழிகளில் நீர்முட்ட வைக்கிறார். கிளைமாக்சில் முதிர்ச்சியான நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.

அல்லியாக வரும் லட்சுமி மேனன் வனதேவதையாய் பளிச்சிடுகிறார். காட்டு யானையின் வெறியாட்டத்தில் தப்புவது திகில்... இன பழக்கத்தை மீற முடியாமலும், காதலை உதற முடியாமலும் தவித்து மனதில் கிறங்குகிறார்.

விக்ரம்பிரபுவின் தாய் மாமனாக வரும் தம்பி ராமையா கலகலப்பூட்டுகிறார். போலி கும்கி யானையை பழங்குடியினர் கண்டுபிடித்து விடுவார்களோ என உயிர் பயத்தில் இவர் நடுங்கும் சீன்கள் ரகளை. படம் முழுக்க ஒரே மாதிரியே பேசி திரிவது சலிப்பு.

விக்ரம் பிரபுவின் உதவியாளராக உண்டியல் கேரக்டரில் வரும் அஸ்வின் சிரிக்க வைக்கிறார். பழங்குடியின தலைவராக வரும் ஜோய்மல்லூரி நேர்த்தி. காட்சிகளில் திருப்பங்கள், சஸ்பென்ஸ் வைத்து இருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும்.

இதையும் மீறி பழங்குடியினரின் வாழ்வியலும் மலையோர அழகியலும், காதலும் மனதை கட்டிப்போடுகிறது. இமான் இசையில் பாடல்கள் வருடுகின்றன. சுகுமாரின் கேமரா காட்டின் பசுமையை கண்களில் பதிக்கிறது.

Saturday, 22 December 2012

நீதானே என் பொன்வசந்தம்-சினிமா விமர்சனம்.


2-ம் வகுப்பு படிக்கும்போதே ஜீவாவும், சமந்தாவும் நண்பர்களாக இருக்கின்றனர். பிறகு சிறு பிரச்சினையில் இருவரும் சண்டைபோட்டு பிரிகிறார்கள். மீண்டும் 10-ம் வகுப்பு படிக்கும்போது ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். பழைய பகையை மறந்து மீண்டும் நட்பாக பழகுகின்றனர். இந்த நட்பு 11-ம் வகுப்பு வரை தொடர்கிறது. அதன்பின் மீண்டும் சண்டை போட்டு பிரிகின்றனர். அதன்பிறகு தொடர்பே இல்லாமல் இருக்கும் இவர்கள் இருவரும் பல கல்லூரிகள் பங்கேற்கும் விழாவில் நேரிடையாக சந்திக்கின்றனர். அப்போது, தங்களுடைய பகையை மறந்து நெருக்கமாக பழகுகின்றனர். இதனால் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.

கல்லூரி முடிந்து வெளிவந்த பின்பும் தொடர்ந்து காதலிக்கிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுக்குள் மீண்டும் பிரச்சினை வர சண்டைபோட்டு பிரிகிறார்கள். பல வருடங்கள் கழித்து, தனது காதலியான சமந்தாவை பார்க்க ஒரு கடலோரக் கிராமத்திற்கு ஜீவா வருகிறார். அங்கு இருக்கும் சமந்தாவை சந்திப்பதற்காக 10 நாட்கள் அங்கேயே தங்கிவிடுகிறார். சமந்தாவை சந்தித்து பேசும்போது, அப்போதும் இருவருக்கும் சண்டை வருகிறது. அதனால், மறுபடியும் பிரிந்து செல்கிறார்கள். சில மாதங்கள் கழித்து சென்னையில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது தனக்கு அடுத்த மாதம் கல்யாணம் நடக்கப்போவதாக சமந்தாவிடம் ஜீவா சொல்கிறார். அதைக்கேட்டு சமந்தா பிரமிப்படைகிறார். இறுதியில் ஜீவாவுக்கு கல்யாணம் நடந்ததா? அல்லது ஜீவா-சமந்தா காதல் ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை. கதையே இல்லாமல் ஒரு படம் எவ்வாறு எடுப்பது என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், உத்யோகம் பார்க்கும் இளைஞன் என மூன்றுவித கெட்டப்புகளில் வலம் வருகிறார் ஜீவா. இளைஞனாக கவர்ந்த ஜீவா மாணவ பருவத்தில் நம்மை ஈர்க்கவில்லை. 14 வயதில் எப்படி இருந்தாரோ அதுபோலவே 26 வயதிலும் இருக்கிறார். எப்போதும் ஒருவித டல்லாகவே இருக்கிறார். நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். நித்யாவாக சமந்தா நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். அழகின் மொத்த உருவமாய் பளிச்சிடுகிறார். பள்ளி மாணவியாக குறும்பு செய்வதிலும், கல்லூரி மாணவியாக காதல் கொள்வதிலும், இளைஞியாக காதலில் பிரிந்த சோகத்தை வெளிப்படுத்துவதிலும் நவரசங்களை தன்னுடைய நடிப்பால் பிழிந்தெடுத்திருக்கிறார். சமந்தாவிடம் எதிர்பார்க்காத நடிப்பை ரொம்பவும் அசாத்தியமாய் செய்திருக்கிறார். முதல் பாதியில் பின்னணி இசை இல்லாமல் தொய்வில் போகும் திரைக்கதையை தூக்கி நிறுத்துகிறார் சந்தானம். இவர் அடிக்கும் கமெண்டுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. குறிப்பாக ‘பொண்ணுங்களும் கியாஸ் பலூனும் ஒண்ணு, விட்டா பறந்துருவாங்க’ என்று இவர் சொல்லும்போது கைதட்டல்கள் காதை பிளக்கிறது. இவருக்கு ஜோடியாக வரும் அந்த குண்டுப் பெண்ணும் நம்மை கவனிக்க வைக்கிறார். இயக்குனர் கவுதம்மேனனுக்கு காதல், பிரிவு என இரண்டையும் பிரதானமாக வைத்து திரைக்கதையை நகர்த்துவதில் வெற்றிகரமான அனுபவம் இருப்பதால் அதை எளிதாக கையாண்டிருக்கிறார். வருண்-நித்யா கதாபாத்திரங்களை நம்முடன் உலவவிட்டிருக்கிறார். படத்தில் முதல் 10 நிமிடங்கள் டப்பிங்படம் போல் கதையை நகர்த்தியிருக்கிறார். எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான உணர்வை கொடுத்திருக்கிறது. இசைஞானியின் இசையில் ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாகிவிட்டது. அதை எப்படி படம் பிடித்திருப்பார்கள் என்ற ஆவலோடு வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. அனைத்து பாடல்களும் மாண்டேஜூகளாக கொடுத்து ஏமாற்றம் அளித்திருக்கிறார். பின்னணி இசையும் பெரிதாக சொல்வதற்கில்லை. கவுதம் மேனனின் படங்களில் வசனம்தான் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். அதுமட்டுமே இந்த படத்தில் இருப்பது இப்படத்திற்கு பலவீனமாக உள்ளது.

Wednesday, 5 December 2012

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்-சினிமா விமர்சனம்.


நாளை மறுநாள் தன் காதலியான காயத்ரியுடன் கல்யாணம் என்கிற நிலையில் இருக்கும் புதுமாப்பிள்ளை விஜய் சேதுபதி. பொழுதுபோவதற்காக தனது நண்பர்கள் மூன்று பேருடன் கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடிவிட்டு வரலாம் என்று செல்கின்றார்.

நண்பன் அடிக்கும் பந்தை பறந்து வந்து பிடிக்கும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு விடுகிறது. இதனால் கடந்த ஓரிரு வருடங்களில் நடக்கும் அத்தனை சம்பவங்களும் மறந்து போய்விடுகிறது. தற்போதும் அவரிடம் எது சொன்னாலும் அதனையும் உடனுக்குடன் மறந்து போகிறார்.

இந்த பிரச்சினை பெண் வீட்டுக்குத் தெரிந்தால் திருமணம் நடக்கவிடமாட்டார்கள் என நண்பர்கள் நினைக்கிறார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதிக்கும், காயத்ரிக்கும் திருமணம் நடந்ததா? என்பதை படம் முழுக்க சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்.

படம் முழுக்க கலகலப்பாக போகிறது. சீரியசான கதையை இப்படி காமெடியாக சொல்லமுடியுமா? என்னும் கேள்விக்கு சொல்லமுடியும் என சாதித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

விஜய் சேதுபதி மற்றும் அவருடன் நணபர்களாக வரும் மூன்று பேரும் தங்களது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். விஜய் சேதுபதி நடிப்பில் தனி முத்திரை பதிக்கிறார். திருமண மண்டபத்தில் இவர் செய்யும் கலாட்டாவாகட்டும்.... தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்துவிட்டு சொன்ன வார்த்தையையே திரும்ப திரும்ப சொல்லும் போதும் ரொம்பவும் கலகலப்பூட்டுகிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வருகிறார் காயத்ரி. படத்தில் இவருக்கு நீண்ட நேரம் வருகிற கதாபாத்திரம் இல்லை. ஆகையால் நடிப்பதற்குண்டான வாய்ப்பும் குறைவே.

படத்திற்குண்டான லொக்கேஷன்ஸ் தேர்வும் குறைவே. கல்யாண மண்டபம், மருத்துவமனை, வீடு, கிரிக்கெட் கிரவுண்டு என நான்கு இடங்களிலேயே படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். கடைசி அரைமணி நேரம் கதை முழுக்க முழுக்க திருமண மண்டபத்திலேயே நடக்கிறது. இருப்பினும், எந்தவித சலிப்பையும் ஏற்படுத்தாத அளவுக்கு படமாக்கியிருக்கிறார்கள்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தைதான் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். இவருடைய ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் வேத்சங்கரின் பின்னணி இசையும் படத்திற்கும் மேலும் பலம் சேர்த்திருக்கின்றன.

மொத்தத்தில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ சிரிப்பு அலை.