Wednesday, 30 January 2013

விஸ்வரூபம்-சினிமா விமர்சனம்.


நியாயமாக விஸ்வரூபம் படத்திற்கு பிராமணர்கள்தான் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியிருக்கும். எப்படி என்கிறீர்களா... கதையைப் படியுங்கள்... பிராமணப் பெண் பூஜாகுமார், பி.எச்.டி படிப்பதற்காக, அதிக வயசு வித்தியாசம் உள்ள கமலை திருமணம் செய்வதாக ஒப்பந்தம் போட்டு

Wednesday, 23 January 2013

புத்தகம்-சினிமா விமர்சனம்


அரசியல்வாதி பதுக்கிய கறுப்பு பணத்தை மீட்கும் இளைஞன் கதை.


நாயகனான சத்யா, வேலை பார்க்கும் நண்பர்கள் சஞ்சய் பாரதி, விக்னேசுடன் திருவல்லிக்கேணி மேன்சனில் தங்கி படிக்கிறார். சத்யாவுக்கும் டி.வி. நிருபர் ராகுல் பிரீத்துக்கும் மோதல் உருவாகி காதலாக மலர்கிறது.

ஊழல் வழக்கில் சிக்கும் அரசியல்வாதி சுரேஷ், கவுன்சிலர் சந்தான பாரதிக்கு எதிராக செய்தி வெளியிட்டு அவர்கள் பகைக்கு ஆளாகிறார் ராகுல் பிரீத். ஒரு கட்டத்தில் நூலகத்தில் உள்ள புத்தகம் ஒன்று சத்யா கைக்கு கிடைக்கிறது. அதில் சுரேஷ் சுடுகாட்டில் மறைத்து வைத்த பலகோடி ரூபாய் பற்றிய ரகசிய குறிப்பு இருக்கிறது. அதை வைத்து குறிப்பிட்ட இடத்தில் தேடி மூட்டை மூட்டையாய் கறுப்பு பணத்தை சத்யாவும் நண்பர்களும் கண்டெடுக்கின்றனர்.

அந்த பணத்தை ஜெகபதி பாபு உதவியோடு கைப்பற்ற சுரேஷ் முயற்சிக்கிறார். சத்யாவிடம் பணம் இருப்பதை கண்டுபிடித்து துரத்துகின்றனர். இதனால் நண்பர்களை ஆபத்து சூழ்கிறது. அதில் இருந்து அவர்கள் தப்பினார்களா என்பது மீதி கதை...

காதல் காமெடியில் திகிலை கோர்த்து காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் விஜய் ஆதிராஜ். சத்யா கேரக்டரில் நேர்த்தி. ராகுல் பிரீத்துக்கும் இவருக்குமான மோதலும், காதலும் சுவாரஸ்யம். கஷ்டப்பட்டு பணம் புரட்டி அடிப்பட்ட நண்பன் தாயை காப்பாற்றும் சென்டிமென்ட் அழுத்தம்.

ராகுல் பிரீத் அரசியல்வாதிகளுடன் மோதும் வலுவான நிருபர் வேடத்தை கஷ்டப்பட்டு சுமக்கிறார். காதலில் ஓ.கே. சஞ்சய் பாரதி, விக்னேஷ், மனோபாலா கலகலப்பூட்டுகின்றனர். முதல் பகுதி கதையில் தொய்வு இருந்தாலும் பிற்பகுதி வேகம் பிடிக்கிறது. சுரேஷ், சந்தான பாரதி அரசியல் வில்லத்தனம் காட்டுகின்றனர். ஜேம்ஸ் வசந்தின் பின்னணி இசை கதையுடன் ஒன்ற வைக்கிறது. லட்சுமண் குமார் ஒளிப்பதிவு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.



Saturday, 19 January 2013

சமர்-சினிமா விமர்சனம்.


காதலியை தேடி வெளிநாடு போய் ஆபத்தில் மாட்டிக் கொண்டு மீளப்போராடும் இளைஞன் கதை...

தமிழக எல்லைப்பகுதியில் வனத்தை சுற்றி பார்க்க வருபவர்களுக்கு ‘கைடு’ ஆக இருப்பவர் விஷால். அங்கு வரும் சுனைனாவுக்கு விஷாலின் சாதுரியங்கள் பிடித்துபோக இருவருக்கும் காதல். ஒரு கட்டத்தில்  விஷால் காட்டையே கட்டிக்கொண்டு அழுவது சுனைனாவுக்கு பிடிக்காமல்போக காதலை முறித்து கொண்டு பாங்காக் பறக்கிறார்.

காதல் தோல்வியில் விஷால் நொறுங்கி தவிக்கிறார். ஒருநாள் பாங்காங்கில் இருந்து சுனைனாவின் காதல் கடிதத்துடன் உடனே புறப்பட்டு வருமாறு டிக்கெட் பார்சலில் வருகிறது. அங்கு பயணப்படுகிறார் விஷால்.

விமானத்தில் போகும்போது திரிஷாவின் சினேகம் கிடைக்கிறது. பாங்காக்கில் இறங்கியதும் சுனேனா குறிப்பிட்ட இடத்தில் போய் தேடுகிறார். அவர் வரவில்லை. பல நாட்கள் காத்திருந்தும் ஏமாற்றம்.. சுனைனாவை கண்டுபிடிக்க திரிஷாவின் உதவியை நாடுகிறார் விஷால். அப்போது ஒரு கும்பல் விஷாலை கொல்ல துப்பாக்கியால் சுடுகிறது. இன்னொரு கோஷ்டி காப்பாற்றி பெரிய கம்பேனியில் அழைத்து போய் உட்கார வைத்து காணாமல் போன தங்களின் முதலாளி என கொண்டாடுகிறது.

பத்திரிகைகளில் பெரும் கோடீஸ்வரர் என வந்த அவரது படங்களையும் காட்டுகின்றனர். விஷால் நான் அவனல்ல என்று சொல்லியும் நம்ப மறுக்கின்றனர். போலீசும் சல்யூட் அடித்து மரியாதை கொடுக்கிறது.

திடீரென்று ஒருநாள் மரியாதைகள் காணாமல் போகிறது. முதலாளி என்று கொண்டாடியவர்கள் கம்பெனிக்குள் நுழைய விடாமல் விரட்டியடிக்கின்றனர். தன்னை சுற்றி சதி வேலை பின்னப்பட்டு இருப்பதை விஷால் உணர்கிறார். அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதன்பிறகு எதிர்பாராத திருப்பங்களுடன் அதிரடிகள்...

காட்டில் மரங்களை வெட்டும் கடத்தல் கும்பலை ஆக்ரோஷமாய் தாக்கி விஷால் அறிமுகமாகும் ஆரம்பமே சூடு பறக்கிறது. பிறகு சுனைனா காதல், முறிவு என போகும் கதை பாங்காக் பயணித்ததும் விறுவிறுப்புக்கு தாவுகிறது.

விஷாலை கொலை கும்பல் துப்பாக்கியுடன் துரத்துவது வியர்க்க வைக்கிறது. தன் அட்டை படத்துடன் பத்திரிகையில் வந்த செய்தியை பார்த்து அதிர்வது... பேரிய தொழில் அதிபர் என தன் மேல் முத்திரை குத்தப்பட்டதும் மறுத்து தப்பிக்க முயல்வது என மர்ம முடிச்சுகளுடன் படத்தோடு கட்டிப்போடுகின்றன. கிளைமாக்சில் தந்திரமாக எதிரிகளை வீழ்த்தி கைதட்ட வைக்கிறார்.

திரிஷா வழக்கமான காதல் சமாச்சாரங்களில் இருந்து வித்தியாசம் காட்டுகிறார். வில்லன்களுக்கும் அவருக்குமான தொடர்பு அம்பலப்படும்போது  திடுக்கிட வைக்கிறது.

சுனைனா சில நிமிடங்கள் ஆவேசமாய் வந்து, கிளுகிளு ஆட்டம் போட்டு காணாமல் போகிறார். சம்பத், ஜெயபிரகாஷ், ஸ்ரீமன், ஜான் விஜய் கேரக்டர்கள் நேர்த்தி... பணக்கார வில்லன்களாக வரும் ஜே.டி சக்கரவர்த்தி மனோஜ் பாஜ்பாயின் சைக்கோத்தன விளையாட்டுகள் பரபரக்க வைக்கிறது.

நல்லவர்கள் என அடையாளம் காட்டப்பட்டவர்கள். வில்லன்களோடு கைகோர்ப்பது இன்னொரு அதிர்வு. ஹைடெக் கதை களத்தில் சஸ்பேன்ஸ், திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் திரு... காட்சியோட்டத்தில் இருந்த அழுத்தம் கதையிலும் இருந்திருந்தால் இன்னும் பளிச்சிட்டு இருக்கும்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பலம் சேர்க்கிறது. ரிச்சர்ட் எம். நாதன் கேமரா பாங்காக் அழகை அள்ளுகிறது.

Wednesday, 16 January 2013

அருவி பூங்கா-குற்றாலம் ஐந்தருவி .


 குற்றாலம் ஐந்தருவி பழத்தோட்ட பண்ணையில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான அருவி பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை 3 மாதங்கள் சீசன் காலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்து அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். அவர்கள் பொழுதை போக்க குறிப்பிட்டு சொல்லும் படியான வசதிகள் குற்றாலத்தில் இல்லை. குறிப்பாக மெயினருவி பகுதியில் அமைந்துள்ள பூங்கா மற்றும் சிறுவா பூங்கா, ஐந்தருவி செல்லும் சாலையில் படகுகுழாம் ஆகியவை மட்டுமே உள்ளது. சீசன் காலங்களை தவிர்த்து மற்ற காலங்களில் அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும். இதற்கு குற்றாலத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததும் ஒரு காரணமாகும். தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் குற்றாலத்திற்கு ஆண்டிற்கு 3 மாதம் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் அவல நிலை உள்ளது வேதனைக்குரியது. இந்த குறையை போக்குவதற்காக ஆண்டு முழுவதும் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் வகையில் அருவிப்பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குற்றாலம் ஐந்தருவி பகுதியில் தோட்டக்கலை சார்பில் அமைந்துள்ள பழத்தோட்ட பண்ணையில் ரூ. 5.22 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாய் அருவி பூங்கா அமைக்க கடந்த 2010ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டது. தற்போது இப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மலை மீது இயற்கை எழிலுடன் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமையயுள்ள இந்த அருவி பூங்காவில் குளம், வாகனங்கள் நிறுத்துமிடம், மூங்கில் தோட்டம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, மலர் வனம், சிறுவர்கள் விளையாடும் இடம், நீர்வீழ்ச்சி, நீர்விளையாட்டு திடல், நீரோட்ட நடைபாதை, பாறைத்தோட்டம், காகிதப்பூ தோட்டம், நறுமணப் பூங்கா, சிற்ப விலங்கு தோட்டம், பழத்தோட்டம், கற்பாதை பூங்கா, இயற்கை பூங்கா, உணவகம், பசுமை குடில், புல்வெளி, சூரிய ஒளிவிளக்கு போன்றவை அமைக்கப்படவுள்ளது. அருவி பூங்கா அமைக்கும் பணி துவங்கி சுமார் 2 ஆண்டு காலம் ஆகியுள்ள நிலையில் இந்தாண்டு சீசனுக்குள் பணிகள் நிறைவு பெற்றுவிடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றாலும், பணிகள் முழுமை பெறவில்லை. இந்தாண்டு சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் துவங்கிவிடும். அதற்குள் பணிகள் முடித்து, சுற்றுலாப் பயணிகள் உள்ளே பூங்காவுக்குள் அனுமதிக்கபடுவார்களா என்பது கேள்விக்குரியாக உள்ளது. அருவி பூங்கா பணிகள் நிறைவு பெறும் பட்சத்தில் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்லலாம். கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இருப்பதாலும் ஆண்டு முழுவதும் பரவலான மழை, சில்லென்ற சூழல், மலைச்சரிவுகள், இயற்கையான நீரோடை, ஐந்தருவிக்கு பாய்ந்து செல்லும் தண்ணீரின் ஆர்ப்பரிக்கும் சத்தம், மேகக் கூட்டகள் என இயற்கை வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்த அருவி பூங்கா அனைவரையும் கவரும் வகையில் அமைய உள்ளது.
Tag:குற்றாலம்,  அருவி பூங்கா 

Tuesday, 15 January 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா.



நடிகர் : சந்தானம், டாக்டர் சீனிவாசன், சேது
நடிகை : விசாகா
இயக்குனர் : மணிகண்டன்
இசை : தமன்
ஓளிப்பதிவு : கே.பாலசுப்பிரமணியன்
படத்தோட கதை பாக்யராஜ் இயக்கிய ‘இன்று போய் நாளை வா’ என்ற பழைய படத்தின் கதைதான் என்றாலும், திரைக்கதையை இன்றைய ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

சந்தானம், பவர் ஸ்டார், சேது என மூன்று இளைஞர்கள். மூவரும் விசாகாவை ஒருதலையாக காதலிக்கிறார்கள். அவள் ஒருவரைக் காதலித்தால் மற்றொருவர் விலகிக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மூவரும் தனித்தனியாக அவளை அணுகுகிறார்கள்.

விசாகாவை கவர்வதற்காக, அவளுடைய அப்பா, சித்தப்பா, சின்னம்மா என்று மூவரும் ஒவ்வொருவராக ஐஸ் வைக்கிறார்கள். இறுதியில், விசாகா யாரை காதலிச்சார்? முடிவு என்ன ஆச்சு? என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைத்து சொல்லியிருக்கிறார்கள்.

படத்தோட மிகப்பெரும் பலமே பவர்ஸ்டார்தான். பவர்ஸ்டார் நிஜவாழ்க்கையில் அடிக்கும் லூட்டிகளை வசனங்களாக போட்டு தாக்குகிறார் சந்தானம். இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இதையெல்லாம் பவர் ஸ்டாரும் என்ஜாய் பண்ணுகிறார் என்பதுதான்.

பவர் ஸ்டார் படத்தில் ஸ்கோர் செய்யும் காட்சிகள் ஏராளம். ‘அழகுமலர் ஆட’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவது, தனது அல்லக்கைகளின் பாராட்டுதல்களுடன் நடனப் பயிற்சி மேற்கொள்வது என அசத்துகிறார்.

சந்தானம் இந்த படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும், தன்னை மட்டுமே முன்னிறுத்தாமல் மற்றவர்களுக்கும் சமவாய்ப்பு கொடுத்திருக்கிறார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்ய நினைக்கும் இவருடைய இந்த முயற்சி அவருக்கு வெற்றியையேக் கொடுத்துள்ளது.

சேது இந்த படத்தின் மூலம் புதுமுகமாக அறிமுகமாகியிருக்கிறார். கதாநாயகி விசாகா அழகாக இருக்கிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார்.

சங்கீத வித்வானாக வரும் வி.டி.வி. கணேஷ், தனது குரல் கெட்டதற்கான காரணம் சொல்வது அடக்கமுடியாத சிரிப்பு. கோவை சரளா, டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், தேவதர்ஷினி ஆகியோரும் காமெடியில் நம் வயிரை பதம் பார்த்திருக்கின்றனர்.

படத்தின் ஆரம்பக் காட்சி முதல் கடைசி காட்சி வரை காமெடியை விடாமல் பிடித்துக் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் மணிகண்டன். படத்தோட கதை திருட்டுக் கதை என்பது மட்டுமே உறுத்தினாலும், குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று வயிறு குலுங்க சிரித்துவிட்டு வரலாம்.

தமன் இசையில் அனைத்து பாடல்களும் ஓ.கே. ரகம். பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வேகமும், படத்திற்கு உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது.

மொத்ததில் இந்த லட்டு இனிக்கிறது.